கோவை:கோவையில் கடந்த மாதம் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சத்தியபாண்டி என்பவரும் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவங்களைத் தொடர்ந்து, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, சமூக விரோதச் யெல்களில் ஈடுபடுவோர், சமூக வலைதளங்களில் ஆயுதங்களை காட்டி வீடியோ பதிவேற்றம் செய்வோர், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோகுல் கொலை வழக்கில் இதுவரை 13 பேர் கைதாகி உள்ள நிலையில், சத்தியபாண்டி கொலை வழக்கிலும் சிலர் கைதாகி உள்ளனர். சிலர் தாமாக முன்வந்து நீதிமன்றங்களில் ஆஜராகி உள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் ஆயுதங்களை கொண்டு, மிரட்டும் தொனியில் வீடியோ பதிவேற்றம் செய்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக தமன்னா என்ற வினோதினி சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் இருப்பதுபோல் வீடியோ வெளியிட்டதால் அவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே அவர் மீது கஞ்சா கடத்தல் வழக்கு நிலுவையில் இருந்ததால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ் மேற்பார்வையில், உதவி ஆணையர் ரவி தலைமையில், ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய ஆய்வாளர் தெய்வமணி அடங்கிய தனிப்படை போலீசார், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திரையரங்கில் கடந்த ஆண்டு நடந்த கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட 30 நபர்களை அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட நாளன்று பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.