"டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் இல்லை" - அமைச்சர் முத்துசாமி! கோயம்பத்தூர்: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலக வளாகத்தில் சமுதாயப் பொறுப்பு நிதியின்கீழ், தனியார் வங்கியின் மூலம் வழங்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் 10 ஆட்டோக்களை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து இன்று (ஜன.11) தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, "கோவை மாநகராட்சியில் தற்பொழுது 10 பேட்டரி வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. பேட்டரியை பயன்படுத்தி ஓடும் வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
கோவை மாநகராட்சியில் 68 சதவீதம் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 760 பணிகள் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில், 445 பணிகள் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. பில்லூர் அணையில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது டெங்கு பரவுகின்ற சூழ்நிலை இருப்பதால் சுகாதார மையங்களில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கபட்டுள்ளனர். அதேபோல் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
புயலின் காரணமாக வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை அதிகளவில் பெய்தது. அப்போது முதலமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மிக வேகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பான சூழ்நிலை கொண்டுவரப்பட்டது. பிளாஸ்டிக் பாட்டில்கள் சாக்கடையில் அடைத்திருந்த காரணத்தினால் தான் மழை நீர் சாலையில் தேங்கியது.
தொடர்ந்து பேசிய அவர், "முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட பொங்கல் பரிசு பல்வேறு இடங்களில் கொடுக்கப்பட்டு வரும் சூழலில், வருகிற 14ஆம் தேதி வரை தொடர்ந்து பரிசு தொகுப்பு வழங்கப்படும். நிதி பிரச்சனை இருந்தும் யாரும் விடுபடக் கூடாது என முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை கொடுக்கப்பட்டு வருகின்றன. முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஏழு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் வந்துள்ளது எனவும், 636 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதன் மூலம் 27 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, கோவையில் அதிக மழை வந்தால் அதை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளனர். மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் எந்தெந்த பகுதியில் பாதிப்பு இருக்குமோ அங்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதேபோல் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேலும் கரோனா நோய் தொற்றை பொருத்தவரை கேரளாவில் இருந்து வருபவர்களை கண்காணித்து வருவதாகவும், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பயணிகளையும் கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுபான விற்பனைக்கு இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. டாஸ்மாக்கில் வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை. இதேபோல் டெட்ரா பாக்கெட் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் பிறகு தான் இது குறித்த முடிவு எடுக்கப்படும். மேலும், இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க:Budget Session 2024: நாடாளுமன்ற கூட்டம் ஜன.31ல் கூடுகிறது! இடைக்கால பட்ஜெட் எப்போது தாக்கல்?