கோயம்புத்தூர்:சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.85 அடியாக குறைந்துள்ளது என்றும் இதனால் வரும் நாள்களில் கோவை மாநகரில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்படும் என மக்கள் வேதனை அடைந்துள்ளனர். கோவை மாநகரில் 26 வார்டுகள் என 20க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணை தன் முழு கொள்ளளவாக 49.50 அடியை கொண்டுள்ளது.
இந்த அணையில் இருந்து, தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் அணையின் நீர் மட்டம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மார்ச்சில் அணையின் நீர் மட்டம் கணிசமாக குறைந்து 6அடியாகச் சரிந்தது. இதனைத் தொடர்ந்து பின்வரும் மாதங்களான ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கும் கீழ் சரிந்தது.
தற்போது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையில்லாததாலும், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து உள்ளதாலும், கடந்த வாரத்தில் 3.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 2.85 அடியாகக் குறைந்துள்ளது. இதனால், குடிநீருக்காக அணையில் இருந்து எடுக்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு 4.50 கோடி லிட்டரில் இருந்து, 3.60 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டு உள்ளது.