தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Smart City Project: "லெஜண்ட்ஸ் ஆஃப் கோயம்புத்தூர்" - கோவை மாநகராட்சியின் புதிய அடையாளம்..! - Coimbatore Corporation Commissioner

Legends of Coimbatore: கோவையை உருவாக்கிய முன்னோடிகள் யார் என்பது குறித்தும் கோவையின் அடையாளங்கள் குறித்தும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கோவை மாநகராட்சி புதுமையான திட்டத்தை உருவாக்கியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 18, 2023, 5:25 PM IST

கோவையை உருவாக்கிய முன்னோடிகள் யார் என்பது குறித்தும் கோவையின் அடையாளங்கள் குறித்தும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கோவை மாநகராட்சி புதுமையான திட்டத்தை உருவாக்கியுள்ளது

கோயம்புத்தூர்: பண்டைய காலம் முதல் தொன்று தொட்டு கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. கோவன் என்ற பழங்குடியின தலைவனின் கீழ் இந்நிலப்பகுதி இருந்ததால் கோவன்பதி என்றும், கோவன்புத்தூர் என்றும் அழைக்கப்பட்டு வந்த நிலையில் காலப்போக்கில் கோயம்புத்தூர் என மாறியுள்ளது.

தொழில் வளர்ச்சி அடைந்த நிலையில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் பல்வேறு தொழில்கள் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக ஜவுளித்துறை, தங்க நகை தொழில், சிறு குறு தொழில்கள் என கோவையை உலக நாடுகள் அறிந்துகொள்ளும் வகையில் தொழில் துறை சிறந்து விளங்குகிறது.

அந்த வகையில் பல்வேறு வளர்ச்சியை பெற்று இந்தியாவில் முக்கிய நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள
கோவை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் பந்தய சாலை, ஆர்.எஸ்.புரம், குளக்கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை கவரும் வகையிலும் கோவையை பெருமை படுத்தும் வகையிலும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள டி.பி.சாலை எனப்படும் திவான் பகதூர் சாலையின் இருபுறமும் கோவையின் மாமனிதர்களை நினைவுகூரும் சாலையாக கோவை மாநகராட்சி மாற்றியுள்ளது. சாலையின் இருபுறமும் கோவையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், தொழில் முன்னோடிகள், சமூக பணியாற்றியவர்கள் என 33 தலைவர்களின் உருவப்படங்கள் "லெஜண்ட்ஸ் ஆஃப் கோயம்புத்தூர்" என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள், அவர்களைப் பற்றி அறியும் வகையில் அவர்களின் சுருக்கமான வரலாறு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இடம்பெற்றுள்ளது.

கோவையின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்கள்: நவீன கோவையை உருவாக்கியவர்களில் முதன்மையானவரான தொழிலதிபர் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ், சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டி, கூட்டுறவு இயக்கத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தவரான டி.ஏ.ராமலிங்கம் செட்டியார், மெட்ராஸ் பிரசிடெண்ட்சியின் கல்வி அமைச்சராக இருந்த டி.எஸ்.அவினாசிலிங்கம், விஞ்ஞானி ஜி.டி.நாயுடு, டவுன்ஹால் மணிக்கூண்டு கோவை நகராட்சி தலைவராக இருந்த ராவ் பகதூர் ஏ.டி.திருவேங்கடசாமி நினைவாக அமைக்கப்பட்டது குறித்த சுவராஜ்ஜியமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

திரும்பி பார்க்க வைத்த சினிமா முன்னோடிகள்: கோவையில் வெரைட்டி ஹால் திரையரங்கை உருவாக்கிய சாமிகண்னு வின்செண்ட், திரைப்படத் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர், மலைக்கள்ளன் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு ஆகிய சினிமா துறையின் முன்னோடிகள் நினைவுகூரப்பட்டுள்ளனர்.

அதேபோல திவான் பகதூர் விருது பெற்ற சூலூர் லட்சுமி நரசிம்ம ஐயர், சுதந்திரப் போராட்ட வீரர் கோவை சுப்ரி, மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் உறுப்பினராக இருந்த திவான் பகதூர் சி.வி.வெங்கடரமணா ஐயங்கார், விஞ்ஞானி டாக்டர்.ஜே.துல்ஜராம் ராவ், பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனங்கள் உருவாக வழிவகுத்த பி.எஸ்.கோவிந்தசாமி நாயுடு, குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை செய்த எஸ்.செங்காளிப்பன் ஆகியோர் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

கோவையை வளார்த்த தொழில் முன்னோடிகள்: நகைகளின் உத்தரவாதத்தின் அடையாளமாக பி.ஏ.ஆர் என பொறிக்க செய்த பி.ஏ.ராஜூ செட்டியார், சட்டசபை உறுப்பினரும் தொழிலதிபருமான என்.மகாலிங்கம், தென்னிந்தியாவில் பருத்திக் கழிவுகளுக்கான வணிகச் சந்தையை கண்டறிந்த கோகுல் தாஸ் துளசி தாஸ், கோவையில் கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் மையத்தை உருவாக்கிய எம்.எஸ்.பழனியப்ப முதலியார், மலிவான விலையில் உணவளித்த பத்ம ஸ்ரீ சாந்தி பி.சுப்ரமணியம், பெண் கல்விக்கு பணியாற்றிய டி.வி.எம்.தில்லை அம்மாள், சாவித்திரி உள்ளிட்டோரின் வரலாற்று தகவல்கள் உருவப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன.

இதனை அப்பகுதி வழியாக செல்லக்கூடியவர்கள் படித்து அறிந்துகொள்ளும் வகையில் உள்ளதாகவும், கோவையின் வளர்ச்சிக்கும், கோவையின் அடையாளங்களை உருவாக்கியவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது, இதனை மாணவர்கள் அவசியம் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறுகையில், "கோவை மாநகரம் பல்வேறு நபர்களின் பங்களிப்பினால் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மாநகராட்சியாக உயர்ந்துள்ளது. மாதிரி சாலையான டி.பி.சாலையில் இரு புறமும் இந்த நகரம் உருவாக பங்களித்தவர்களை நினைவு கூரும் வகையிலும், அவர்கள் குறித்து அனைத்து மக்களும் தெரிந்து தெரிந்து கொள்ளும் வகையிலும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது 30 க்கும் மேற்பட்ட தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 32 இடங்களில் விடுபட்ட தலைவர்கள், கோவையின் அடையாளங்கள், தொன்மை சார்ந்த கட்டிடங்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் வைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மவுத்தார்கன் வாசித்து அசத்திய நெல்லையின் செல்லப்பிள்ளை காந்திமதி யானை!

ABOUT THE AUTHOR

...view details