கோவை மாநகராட்சி கூட்ட அரங்கில் பட்ஜெட், பற்றாக்குறை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது! கோவை:மாநகராட்சி கூட்ட அரங்கில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பட்ஜெட் கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ் கவுன்சிலர்கள் கறுப்பு உடை அணிந்தும், கறுப்பு துண்டு அணிந்தும் பங்கேற்றனர். மேலும், கூட்ட அரங்கிற்கு செல்வதற்கு முன்பாக, ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கத்தைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, நிதிநிலை அறிக்கை மாநகராட்சி கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கோவை மாநகராட்சி 2023 -24ஆம் ஆண்டிற்கான மொத்த மூலதன வருவாய் ரூ.3018.90 கோடி எனவும், மொத்த மூலதன செலவு ரூ.3029.70 கோடி எனவும்,
நிகர பற்றாக்குறை ரூ.10.17 கோடி எனவும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை மாநகராட்சியில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பற்றாக்குறை பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
QR கோட், ஸ்கேனிங், கூகுள் பே, போன் பே முதலிய செயலிகள் மூலம் வரவு, செலவிற்கு உரிய தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ள 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. கோவையில் 165 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள செம்மொழிப் பூங்காவில், முதல்கட்டமாக 45 ஏக்கரில் 86 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாமன்ற உறுப்பினர்களின் வார்டுகளில் உள்ள பணிகளை நிறைவேற்றும் விதமாக "மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டுத் திட்டம்" என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, ஒவ்வொரு மாமன்ற உறுப்பினருக்கும் தலா 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய ,"மாநகராட்சி மேயர் விருப்ப நிதி" என்ற திட்டம் இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டு இதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி கூட்ட அரங்கில் பட்ஜெட், பற்றாகுறை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது! இதையும் படிங்க:தமிழ்நாட்டை இரண்டாக பிரிந்து கொங்கு மாநிலம் உருவாக்க வேண்டும் - அர்ஜுன் சம்பத்