கோவை மாநகராட்சி 32ஆவது வார்டுக்குள்பட்ட விளாங்குறிச்சியில் லெனின் வீதி, அம்பேத்கர் நகரில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்துவருகின்றனர்.
இவர்களது வீட்டில் ஏதேனும் இறப்பு ஏற்பட்டால் பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்கும் முக்கிய சாலைகள் வழியாக சடலத்தை எடுத்துச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சாக்கடை, கால்வாய், விவசாய நிலங்கள் வழியாகவும் சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்துவருகின்றனர்.
இது குறித்து அம்பேத்கர் நகர் மக்கள் கூறுகையில், காலம்காலமாக இரட்டை சுடுகாட்டு முறை விளாங்குறிச்சியில் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. சடலத்தை பொதுவழியில் எடுத்துச் செல்ல அனுமதிக்காததால் இரண்டு கிலோமீட்டர் சுற்றி சாக்கடை வழியாகக் கொண்டு செல்லவேண்டிய சூழல் உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
சாக்கடை வழியாகச் சடலத்தைக் கொண்டுசெல்லும் பொதுமக்கள் மேலும் தங்களை தேவைப்படும்போது மட்டும் அப்பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்வதாகவும் மற்ற நேரங்களில் தங்களை ஒதுக்கியே வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், சட்டப்பேரவை உறுப்பினர் ஆறு குட்டியின் வீட்டின் அருகே இந்தச் சம்பவம் நடந்துவந்தாலும் இது குறித்து பலமுறை அவரிடம் மனு அளித்தும் தீர்வு இல்லை.
அதேபோல் மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த ஒரு தீர்வும் தங்களுக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் அல்லது மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு தங்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இறந்த மூதாட்டி ஒருவரின் உடலை சாக்கடை வழியாகவும் விவசாய நிலங்கள் வழியாகவும் பட்டியலின மக்கள் எடுத்துச் செல்லும் காட்சி இணையதளத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க : மயானத்துக்குச் செல்ல சாலை இல்லை? - விளைநிலங்கள் வழியாக உடலை சுமந்த உறவினர்கள்!