கோவை:கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று கோவையில் பரப்புரை மேற்கொண்டார். இதையொட்டி, கோவை புலியகுளம் பகுதியில் இருந்து தேர்நிலைத் திடல்வரை 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் இருசக்கர வாகனப் பேரணியை நடத்தினர். இந்நிலையில், கோவை டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி பகுதியில் பேரணி வரும்போது, திறந்திருந்த கடைகளை மூட பாஜக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்த இஸ்லாமிய மக்கள் டவுன்ஹால் பகுதியில், பேரணி வரும்போது எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக இருதரப்பினரையும் காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுவரும் சூழ்நிலையில், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அப்துல் வகாப் மாவட்ட ஆட்சியரிடமும், தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் புகார் அளித்தார்.