கோயம்புத்தூர்:பேரூர் பகுதியில், பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் நொய்யல் விழா நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் நாள் நிகழ்வில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்நிகழ்ச்சி ஒரு ஆன்மீக நிகழ்ச்சி என்பது மட்டுமல்லாமல் ஒரு தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றேன் என்ற மிகப்பெரிய பெருமையோடு நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன்.
காவிக்கும், தமிழுக்கும் சம்பந்தமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஆவியே தமிழ் தான் என்றும் காவியோடு சேர்ந்த ஆவியே தமிழ் தான் என்றும் பலருக்குத் தெரியாது. ஆன்மீகத்தோடு தமிழை வளர்ப்பதற்காகவே பேரூர் ஆதீனம் நிறுவப்பட்டது. நூற்றாண்டுகளாக இவர்கள் தமிழை இங்கு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழுக்காக கல்லூரி ஆரம்பிக்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் கூட கல்லூரியை ஆரம்பிக்கவில்லை.
இந்த பாரத தேசத்தில் நாம் ஆறுகளை வணங்கினோம். நதிகளை வணங்கினோம். கடல்களை வணங்கினோம். நிலவையும் வணங்கினோம். ஆனால் நாம் வணங்கிக் கொண்டிருந்த நிலவை இன்று இந்தியா அடைந்து, அனைத்து நாடுகளும் இந்தியாவை வணங்கக்கூடிய ஒரு நிலை இன்று வந்திருக்கிறது என்றால் அது மெய்ஞானமும், விஞ்ஞானமும் கலந்தது தான். சந்திராயன் விண்ணில் பாய்வதற்கு முன்பு விஞ்ஞானிகள் கடவுளை வணங்கி விட்டு தான் சந்திராயனை அனுப்பினார்கள்.
அப்போது சிலர் அதை இது விஞ்ஞானம் தானே எதற்கு கோயிலில் வைத்து விட்டு கிளம்புகிறீர்கள் என்று பரிகசித்தார்கள். விஞ்ஞானமாக இருந்தாலும் மெய்ஞானமாக இருந்தாலும் இறைவனின் சக்தி அனைத்திலும் இருக்க வேண்டும். அமெரிக்காவில் விண்வெளிக்குச் சென்றவர்கள் கூட அனுமனின் சிலையை பாக்கெட்டில் வைத்திருந்தார்கள். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கூட அனுமன் சிலையை வைத்திருந்தார். எனவே உலகத்திற்கே நமது கடவுள்கள் தான் வழி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நிலவில் எங்கு சென்று அடைந்தோமோ அந்த இடத்தை சிவசக்தி என்று பிரதமர் மோடி சொல்லி இருப்பது வாழ்க்கையில் நாம் எல்லாம் கேட்கக்கூடியது. மக்களின் வரிப்பணத்தை கொண்டு தானே சந்திராயனை செலுத்தினீர்கள். அப்படி இருக்க எப்படி சிவசக்தி என்று பெயர் வைக்க முடியும் என்று முகநூலில் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். கோயிலில் இருந்து வந்த பணத்தில் தானே அனைத்தையும் செய்கிறோம். அப்படி இருக்க நாங்கள் அதைக் கேட்க மாட்டோமா?.
சாதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி உங்களுக்கு வந்தால் ரத்தமா என்று கேட்பது போல் உள்ளது. தமிழக கோயில்கள் பொருளாதாரத்தில் சிறந்தது. சாமி வேண்டாம். சாமியைப் பற்றிய தகவல்கள் வேண்டாம். பக்தி வேண்டாம். ஆனால் கோயில் உண்டியல் மட்டும் எனக்கு வேண்டும் என்று சிலர் நடந்து கொள்கிறார்கள். ஆன்மீகத்திற்கும், தமிழுக்கும் சம்பந்தமில்லை என்று சிலர் பேசுகிறார்கள்.
அப்படி இல்லை தமிழை வளர்த்தது ஆன்மீகம். ஆன்மீகத்தை வளர்த்தது தமிழ் என்பதில் நாம் அனைவரும் மிக தெளிவாக இருக்க வேண்டும். தமிழை வளர்த்த காவிக்கு நாம் மரியாதை செலுத்திக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் அது தமிழகத்தை தாண்டி டெல்லியில் செங்கோலாக அமர்ந்துள்ளது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் வேறு எந்த மாநிலத்திற்கும் இந்த பெருமை கிடைக்கவில்லை.
எந்த மாநிலத்திற்கும் இப்படிப்பட்ட கொள்கைகள் இல்லை. மருத்துவரும், நொய்யல் ஆறும் ஒன்று, நோயை தீர்க்கும் நொய்யல். ஆனால் இன்று அந்த நொய்யல் ஆறு ஆக்கிரமிப்புகளாலும், பல்வேறு பொருட்கள் அதில் கலந்து கொள்வதாலும் அது மாசுபட்டிருக்கிறது. கோதாவரி ஆறு என்றால் நாம் தெலுங்கானாவிடமும், ஆந்திராவிடமும் நாம் சில நேரங்களில் விவாதம் செய்ய வேண்டி உள்ளது.