கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் அப்பகுதியைச் சுற்றியுள்ள காளியாபுரம், நரிக்கல்பதி, வெப்பரை, சேத்துமடை, செமணாம்பதி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்றுவந்தனர். இந்நிலையில் பள்ளியில் வகுப்பறைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், கூடுதல் வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் அருகில் கட்டப்பட்டது. பழைய கட்டடத்தில் இயங்கிய வகுப்புகள் அனைத்தும் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டன.
இதனால் பழைய பள்ளி கட்டடம் போதிய பராமரிப்பு இல்லாததால் மேற்கூரை ஓடுகள் உடைந்து சேதமடைந்தன. பள்ளி வளாகத்துக்குள் நுழையும் வெளிநபர்கள் கட்டடத்தில் உள்ள கதவு, ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். பள்ளிக்கு இரவு காவலர் இல்லாததால், மது அருந்துவது உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களும் அங்கு நடைபெறுகிறது.