கோயம்புத்தூர்:தூய்மைப் பணியாளர்களுக்கான நல வாரியப் பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று (அக்.26) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு தலைமை வகித்தார்.
ஆய்வு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கடேசன் பேசுகையில், “இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக சம்பளம் குறித்தான பிரச்னைதான் இருந்தது. ஒரு வார காலமாக கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடைபெற்று வந்தது. சம்பள விஷயத்தில் சில குழப்பங்கள் உள்ளது. State Minimum Wages-தான் கொடுக்க வேண்டும் என்று அரசு தெரிவித்து, அதுதான் நடைமுறையில் உள்ளது.
மற்றொரு அரசாணையில், தமிழ்நாட்டில் பொதுவாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் ஊதியத்தை நிர்ணயம் செய்யலாம் என்பதும் உள்ளது. PWD துறையினர் ஒரு ஊதியத்தை நிர்ணயிப்பார்கள். தமிழக அரசு, இந்த ஊதியங்களில் எந்த ஊதியம் குறைவாக உள்ளதோ, அதனைக் கொடுக்கலாம் என்று தெரிவித்ததால் அதிகாரிகள் குழம்பி உள்ளனர்.
இது போன்ற குழப்பங்கள் கோவையில் மட்டும் இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் இல்லை. இதற்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியர் 715 ரூபாய் தர வேண்டும் என்று அரசாணை வெளியிட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், முழுமையாக ஆய்வு செய்து தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதானர்.
அதேநேரம், மாநகராட்சி மேயர் தலைமையிலும் 648 ரூபாய் என்ற தீர்மானம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்டுள்ளது” என்றார். ஆனால், தீர்மானம் போடப்பட்டு செப்டம்பர் மாதம் வரை அந்த தொகை தரப்படாமல் இருந்ததாக தெரிவித்த அவர், தொழிலாளர்கள் அனைவரும் ஜனவரி மாதத்தில் இருந்து அந்த ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கிறார்கள் என்றார்.
பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் Minimum Wages இருக்கும், அதேபோல் மத்திய அரசிடமும் Minimum Wages இருக்கும் நேரத்தில், எந்த ஊதியம் அதிகமாக உள்ளது, அதனை பின்பற்றும்படி மத்திய அரசு தெரிவிப்பதாக கூறினார்.
ஆனால் தமிழ்நாட்டில் இது அப்படியே மாறுபட்டு உள்ளதாகவும், எது குறைவாக உள்ளது அதனை தர வேண்டும் என்று கூறுவதாகவும் தெரிவித்த அவர், அந்த அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், எந்த ஊதியம் அதிகமாக உள்ளதோ, அதனை தமிழக அரசு வழங்க வேண்டும் என ஆணையத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
ஏனென்றால், இந்த வேலையைப் பொறுத்தவரை வேறு யாராலும் செய்ய முடியாது. கரோனா காலத்திலும் தூய்மைப் பணியாளர்களின் பணியை யாராலும் மறக்க முடியாது. கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு அலுவலர்கள் ஆகிய மூன்று துறையினருக்கும் ஊதியம் அதிகமாக இருந்ததாகவும், ஆனால் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் மிகவும் குறைவாக வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.