கோயம்புத்தூர்: காந்திபுரம் பகுதி 48வது வார்டில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் மதிப்பீட்டில் நவீன அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அங்கன்வாடி மையங்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தொகுதிகளில் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்குமாறு முதலமைச்சர் தெரிவித்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தெற்கு தொகுதிக்குட்பட்ட 10 முக்கிய பிரச்சனைகளை அளிக்க உள்ளேன்.
குறிப்பாக மழையினால் சேதம் அடைந்த பகுதிகளான லங்கா கார்னர் அவிநாசி மேம்பாலம் ஆகிய இடங்களும் குறிப்பிடுவதாக தெரிவித்தார். மேலும் விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காதது குறித்து பேசிய அவர், கட்சியின் தலைவராக ஸ்டாலின் வாழ்த்துகளை கூறவில்லை என்றாலும் மாநிலத்தின் முதலமைச்சராக அவர் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும்.
தொடர்ந்து அவர் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துகளை தெரிவிக்காமல் உள்ளதாகவும் கூறினார். பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பாஜகவினர் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுகவில் மாற்றுக் கட்சியினர் இணைவது போல எங்கள் கட்சியிலும் திமுகவிலிருந்து பலரும் இணைந்து வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்