தமிழ்நாட்டையே கொந்தளிப்பிலும் சோகத்திலும் ஆழ்த்தியிருக்கும் சம்பவம் கோவையைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவியின் தற்கொலை தான். தான் பயின்று வந்த பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியரின் தொடர் பாலியல் அத்துமீறல்களாலும் அதனை பள்ளியின் நிர்வாகத்திடம் புகார் செய்தும் அவர்கள் விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று கூறி தக்க நடவடிக்கை எடுக்க மறுத்ததன் விளைவாக இன்று ஒரு மாணவி உயிருடன் இல்லை.
இதேபோல் பல சம்பவங்களை நாம் நெடுங்காலமாக பார்த்து வருகிறோம். குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கொடுக்க வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆம்! அவர்கள் அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அம்மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறலுக்கு அந்த ஆசிரியர்கள் தான் காரணம். ஆனால் அம்மாணவியின் தற்கொலை எண்ணத்திற்கும் மரணத்திற்கும் நம் சமூகம் தான் காரணம். இதுவே மறுக்க முடியாத உண்மை.
'வெளிய தெரிஞ்சா உனக்கு தான் அசிங்கம், இத விட்டுடு'
ஆண்டாண்டு காலமாக நாம் கற்பித்து வரும் கற்பிதங்களில் ஒன்று பெண்ணுடல் என்பது புனிதமானது, ஒரு குடும்பத்தின் மரியாதையும் கௌரவத்தையும் கண்ணியத்தையும் தாங்கி நிற்கும் கருவியே அவ்வீட்டின் பெண்கள் தான். பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்று பேசியே பெண்களை அந்நியப்படுத்தி வைத்துவிட்டோம். அது போதாதென்று அவர்களுக்கு பேசும் வாய்ப்பை ஒரு போதும் நாம் வழங்குவதில்லை.
பெண்களுக்கு என்ன தேவை, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆண்களே முடிவு செய்யும் தந்தைவழி சமூகமாக நாம் இருந்து வருவதும் இம்மாதிரியான பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளான பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அநீதியை வெளியே சொல்லாமல் சொல்லவும் முடியாமல் தற்கொலை செய்து கொள்வதற்கு முக்கியக் காரணம்.
பெரும்பாலும் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களை பெண்கள் பொதுவெளியில் சொல்லாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் அதற்கு பின்னர் எதிர்கொள்ளப் போகும் கேள்விக்கனைகள் தான். “ச்சச, அப்படியெல்லாம் இருக்காது, அவர் பாக்க அந்த மாதிரி ஆளா தெரியவில்லையே, இப்படி ஒரு சம்பவம் நடந்ததா சொல்றியேமா அதுக்கு என்ன ஆதாரம்? வேறு யாராவது இதை பார்த்தார்களா? அவருக்கு அப்படி ஒரு எண்ணம் எப்படி வந்துச்சி? நீ ஏதாச்சும் அவர் கிட்ட சிரிச்சி பேசுனியா? இதெல்லாம் வெளியே தெரிஞ்சா உனக்கு தான கெட்டபெயர், பேசாம கெட்ட கனவா நினைச்சி மறந்துரு” இவை அனைத்தும் தான் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து கூறினால் அவர்கள் முதலில் எதிர்கொள்ளும் இந்த கேள்விகளால் தான் பெரும்பாலும் யாரும் வெளியில் சொல்வதில்லை.
#Metoo - பேசப்படாமல் போய்விட்டது