கோவை: நாடு முழுவதும் 'தூய்மைப் பணி' என்ற பெயரில் குப்பை அள்ளுவது, மனித கழிவு, சாக்கடை அல்லது கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி அடைப்புகளை நீக்குவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படும் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து மரணம் அடைந்து வருவது அதிகரித்து வருகிறது.
இதனைத் தடுக்கும் வகையில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு தடை மற்றும் மறுவாழ்விற்கான சட்டம் 2013ஆம் ஆண்டு (Manual Scavengers Deaths Prevention Act) கொண்டுவரப்பட்டது. எனினும், இத்தகைய 'மலக்குழி மரணங்கள்' தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
43 பேர் மரணம்; 20 பேர் மட்டுமே கைது: குறிப்பாக, 2022ஆம் ஆண்டில் 8 மாதங்களில் 15 பேர் உயிரிழந்தனர். 2021 நவம்பர் முதல் 2023 ஜூன் வரை தமிழகத்தில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இறந்த நிகழ்வுகள் பள்ளிகளில் பட்டியலின குழந்தைகளை கழிவறை மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தியது மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மீதான வன்கொடுமைகள் உள்ளிட்ட 34 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. இதனை இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் நேரடியாக கள ஆய்வு செய்தது. இந்த 34 சம்பவங்களில் மொத்தம் 43 பேர் மரணம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக, 25 சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 12 வழக்குகளில் 20 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு முறையான விசாரணை நடைபெறுவதில்லை. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததும் தெரியவந்துள்ளது.
சமூக விழிப்புணர்வு மையம் ஆய்வு:இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் சாக்கடை கழிவுநீர் தொட்டிகள், கால்வாய்களில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்கும் விதமாக, இதுதொடர்பாக தொடர்ந்து இயங்கி வரும், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் கோவையில் இதற்கான பொது விசாரணையை நடத்தியது. இதில், மலக்குழி மரணங்களை தடுக்கப் போராடி வரும் சமூக செயல்பாட்டாளர்கள், சட்ட வல்லுநர்கள் அடங்கிய நடுவர் குழு முன்னிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது புகார்களை முன்வைத்தனர்.
அரசின் நிவாரணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கிறதா?:குறிப்பாக, விஷவாயு தாக்கி உயிரிலந்த நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு, அந்த உயிரிழப்புக்கு பிறகு அரசின் நிவாரணம் தங்களுக்கு கிடைத்துள்ளதா? என்பதையும், சட்ட ரீதியாக என்னென்ன நடவடிக்கைகளை காவல்துறையும், மாவட்ட நிர்வாகங்கள் எடுத்துள்ளன? என்பதையும், குடும்ப உறுப்பினரின் இழப்பால் எந்த மாதிரியான பாதிப்புகளை சந்திக்கிறோம் என்பதையும் நடுவர் குழு முன்பு முன் வைத்தனர். பாதிக்கப்பட்ட மக்கள், சட்ட ரீதியாகவும், நிவாரணத்திற்கும் அடுத்தகட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? என்ற ஆலோசனைகளை நடுவர் குழு வழங்கியது.
உடனடியாக நிவாரணம் கிடைக்க என்ன வழி?:மேலும், அனைத்து வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து அறிக்கையை தொகுத்து அரசுக்கு வழங்கப்போவதாகவும், அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கையை துரிதப்படுத்தவும் பரிந்துரைக்கப் போவதாக நடுவர் குழுவை சேர்ந்த வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்தார். மேலும் மலக்குழி மரணத்தில் உயிரிழப்பவர்கள் அருந்ததி நேராக இருந்தாலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்வதில்லை அது போல் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்வதில்லை என குற்றம் சாட்டினர்.