அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேட்டி கோயம்புத்தூர்: கோவை மாவட்ட அதிமுக சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களை ஆய்வு செய்து, கனரக வாகனங்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கொடியசைத்து வாகனங்களை அனுப்பி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, “மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளது. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் பொதுமக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவையில் இருந்து நிவாரணப் பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சென்னையின் தற்போதைய சூழலுக்கு திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை தான் காரணம். கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தின் போது செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீரை திறந்து விட்டதால் தான் பாதிப்பு ஏற்பட்டதாக தவறான தகவல்களை திமுகவினர் பொதுமக்களிடம் பரப்பினர். ஆனால், உண்மை நிலை அதுவல்ல.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சுமார் 35 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே வெளியேற்ற முடியும். 150க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிறைந்து வெளியேறி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானதன் காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டது.
அப்போது தாம்பரத்தில் அதிகபட்சமாக சுமார் 51 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது. ஒவ்வொரு ஆண்டுகளின் இறுதியிலும், மழை அதிகபட்சமாக பொழிவது வழக்கமாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்க வேண்டும்.
கடந்த ஆட்சிக் காலங்களில் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் மூலம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தனியார் உதவியுடன் 1500க்கும் மேற்பட்ட பம்பு செட்டுகள் தயார் நிலையில் வைத்திருந்து, ராட்சத மோட்டார்கள் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2015 ஆம் ஆண்டில் பெரு வெள்ளத்தின் போது 2 லட்சம் டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் துரித நடவடிக்கையாக உணவுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. ஆனால் இப்போது சென்னை மாநகரம் முழுவதுமாக முடங்கியுள்ளது. முறைப்படி திட்டமிட்டு திமுக அரசு எந்த பணியையும் செய்யவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.
தகவல் தொழில்நுட்ப அணியை வைத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், திமுக அரசு சென்னையை மீட்டு உள்ளதா என்பது மக்களுக்கே தெரியும். சமூக வலைத்தளங்கள் மூலம் வெற்று விளம்பரம் செய்து திமுக அரசியல் செய்து வருகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.2 ஆயிரம் கோடி வரை இழப்பு..! முடிந்ததை செய்வோம்; அமைச்சர் அன்பில் மகேஷ்..