தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஈபிஎஸ் சிங்கம் போன்றவர்; திமுகவின் அடிமை கட்சிகள் தான் காங், மதிமுக': எஸ்.பி.வேலுமணி விளாசல்! - அதிமுக லேட்டஸ்ட் நியூஸ்

’எடப்பாடி கே.பழனிசாமி யாருக்கும் அடிமை இல்லை; சிங்கம் போல இருப்பார். கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், மதிமுகவினர் தான் திமுகவிற்கு அடிமையாக இருக்கிறார்கள்’ என தொண்டமுத்தூரில் திமுக அரசைக் கண்டித்து நடந்த அதிமுகவினரின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 3, 2023, 4:39 PM IST

Updated : Jan 3, 2023, 5:03 PM IST

ஈபிஎஸ் சிங்கம் போன்றவர்; திமுகவின் அடிமை கட்சிகள் தான் காங், மதிமுக': எஸ்.பி.வேலுமணி விளாசல்!

கோவைமாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் திமுக அரசைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (ஜன.3) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, 'மக்கள் விரோத திமுக அரசினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டிற்கே எதுவும் செய்யாத வெற்று ஆட்சி நடக்கிறது. மக்களுக்கு எந்த திட்டத்தையும் திமுக அரசு தரவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வதை எதுவும் செய்யவில்லை. ஒன்றும் தெரியாத கையாலாகாத முதலமைச்சர், ஸ்டாலின்.

ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு:கோவை மாவட்டத்தை திமுக அரசு புறக்கணிக்கிறது. எடப்பாடி கே.பழனிசாமி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. தொண்டாமுத்தூர் தொகுதிக்கோ, கோவை மாவட்டத்திற்கோ எந்த வேலையும் திமுக அரசு செய்யவில்லை. அதிமுக அரசு கட்டிய பாலங்களில் திமுக போஸ்டர்கள் ஒட்டியுள்ளது. இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு எதுவும் செய்யவில்லை. மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம், குடிநீர் திட்டம் உள்ளிட்டப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: சொத்து வரி, மின் கட்டண உயர்வால் திமுக அரசு மக்களை வாட்டி வதைக்கிறது. முதியோர், விதவை உதவித்தொகையை நிறுத்திய பாவம் சும்மா விடாது. அத்திகடவு - அவிநாசி திட்டத்தின் 5% பணிகளை கூட திமுக அரசு செய்யவில்லை. அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மூலம் தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து குளங்களுக்கும் நீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான திட்டங்களை தரும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தார்.

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு:காவல் துறை திமுகவிற்கு ஜால்ரா போடாதீர்கள். அதிமுக தொண்டர்கள் மீது பொய் வழக்குப் போடாதீர்கள். பெண் காவலருக்கே, திமுகவினர் பாலியல் தொந்தரவு செய்தனர். இந்த ஆட்சியில் காவல் துறையினருக்கு பாதுகாப்பு இல்லை.

போதைப்பொருட்கள் விற்பனையில் திமுகவினர்:காவல் துறையினர், அரசு அதிகாரிகள், நடுநிலையோடு நடந்து கொள்ளுங்கள். எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை, மணல் கடத்தலில் திமுகவினர் ஈடுபடுகின்றனர். திமுகவினர், காவல் துறையினர் உடன் இணைந்து கஞ்சா விற்கிறார்கள். காவல் துறையை செயல்பட திமுக விடுவதில்லை. காவல்துறை ஏவல் துறையாக உள்ளது. கருணாநிதி இருக்கும்போது கூட இந்தளவு மோசமான ஆட்சி இருந்ததில்லை. ஸ்டாலின் செய்த ஒரே சாதனை, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியது தான். அதிமுக போராட்டம் அறிவித்த பிறகே, பொங்கல் பரிசாக கரும்பு கொடுக்கிறார்கள்.

திமுகவினருக்கே வருத்தமளிக்கும் ஆட்சி: திமுக ஆட்சி போய்விடும். திமுகவினரே இந்த ஆட்சி வேண்டாம் என சொல்லும் அளவிற்கு மோசமான ஆட்சி நடக்கிறது. திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருத்தப்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்வோம்.

பெட்டி எங்கே போனது?: ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்டியோடு வந்து மனுக்களை பெற்றார். அந்த பெட்டி எங்கே‌ உள்ளது? மோசமான ஆட்சி நடக்கிறது. ஸ்டாலின் குடும்பம் ரூ.50 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளது. அதிமுகவினர் மீது வழக்குப் போட்டு, ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடிக்கிறது.

நாங்கள் சிங்கம் போன்றவர்கள்: கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி அடுத்து அவரது மகன் வருகிறார். இது குடும்ப கட்சி. எங்களைப் பார்த்து அடிமைகள் என்கிறார்கள். நாங்கள் எந்த காலத்திலும் யாருக்கும் அடிமை இல்லை. எடப்பாடி பழனிசாமி யாருக்கும் அடிமை இல்லை. சிங்கம் போல இருப்பார். கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், மதிமுகவினர் திமுகவிற்கு அடிமையாக இருக்கிறார்கள்.

பெண்களுக்கு மாதம் ரூ.1000:சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்தார்களா? கம்யூனிஸ்ட் கட்சியினர்.. உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதை கண்டித்தார்களா? நீங்கள் தான் அடிமைகள். சொத்து வரி, மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும். பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்க வேண்டும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வருவார்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியா ஒருபோதும் போரை ஊக்குவிப்பதில்லை - ராஜ்நாத் சிங்

Last Updated : Jan 3, 2023, 5:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details