கோயம்புத்தூர்:கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று (செப்.19) பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கட்சியினரிடையே பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெல்லும். அதிமுக கூட்டணியில் யார் அங்கம் வகித்தாலும், அவர்கள் செல்லும் நோட்டு, டாலர் நோட்டு. கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்கள் கிழிந்த இத்துப்போன செல்லாத நோட்டு" என கூறினார்.
இதனையடுத்து மேடையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "திமுக ஆட்சி போக வேண்டும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். மதுரை மாநாட்டிற்குச் செல்ல உணவு கூட வேண்டாம். வண்டி தயார் செய்து தந்தால் போதும் என தொண்டர்கள் எழுச்சியுடன் வந்தனர். மதுரை மாநாட்டைப் பார்த்து திமுகவினர் பயந்து விட்டனர்.
மதுரை மாநாட்டை பற்றி தெரியாமல், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை படிக்காமல் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் பெரிய தலைவராகி விட்டார். கட்சிக்காக உழைக்காமல் உதயநிதி ஸ்டாலின் பதவிக்கு வந்தார். அண்ணா ஏழைகளுக்காக ஆரம்பித்த கட்சி, குடும்ப சொத்தாக மாறிவிட்டது.
எங்களுக்கு ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். எடப்பாடி பழனிசாமி கருத்தே எங்களது கருத்து. வேலுமணி, தங்கமணி பாஜக பற்றி பேசவில்லை என சிலர் சொல்கிறார்கள். எங்களுக்கு எதிரி திமுகதான். இருந்தாலும் கூட்டணிக்காக நாங்கள் தன்மானத்தை விட்டுத் தர மாட்டோம்" என பேசினார்.