கோவை வெள்ளலூர் பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் சமூக செயற்பாட்டாளர் சக்திவேல். இவர் கோவை மாவட்ட ஆட்சியருக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்திருக்கிறார். அதாவது, தன்னை ஒரு வருடத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமித்தால் ஊதியமின்றி ஆட்சிப் பணி மேற்கொண்டு லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பேன் எனக் கூறி ஆட்சியர் ராஜாமணியிடம் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய சக்திவேல், கோவை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலங்களில் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட அதிகம் வசூலிப்பதாகவும் லஞ்சம் பெறுவதாகவும் குற்றஞ்சாட்டினார். கேபிள் டிவி கட்டணம், மதுபானக் கடை, முதியோர் உதவித் தொகை பெறுவது என பல்வேறு வகையில் லஞ்சம் பெறப்படுவதாகவும், வெள்ளலூர் பேரூராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தகவல் அறிக்கை கேட்டால் ஏளனமாகப் பார்ப்பதாகவும் அவர் புகார் தெரிவிக்கிறார்.
இதற்கு முடிவுகட்டும் வகையில், மாவட்ட ஆட்சியர் தன் அதிகாரத்தின் கீழ் தன்னை ஒரு வருடம் ஆட்சியராக நியமித்தால் ஊதியம் பெறாமல் பணி செய்து லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பேன் என்றார்.