கோவை லட்சுமி மில் சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மூத்த முன்னோடிகளின் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று மறைந்த, கழகத்தின் தீர்மானக்குழு உறுப்பினர் க.ரா சுப்பையன், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் மு. இராமநாதன் ஆகியோரின் உருவ படங்களை திறந்து வைத்தார்.
மூத்த முன்னோடிகள் வழியில் போராடி மும்மொழி கொள்கையை எதிர்த்துள்ளோம் - ஸ்டாலின்
கோவை: மூத்த முன்னோடிகள் வழியில் எதிர்த்து போராடியதன் காரணமாக மும்மொழி திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பின்னர் கூட்டத்தில் அவர் பேசுகையில், ’திமுகவிற்கு மூத்த முன்னோடிகளாக வழிகாட்டி கொண்டு இருந்த தலைவர்களின் படத்தை இன்று திறந்து வைத்து இருக்கின்றோம். மறைந்த மு. இராமநாதனை பல்கலைக்கழகமாக கருதுகின்றேன். திராவிடர் இயக்கம், சமூகநீதி, மொழி பிரச்னை என அனைத்தையும் கரைத்து குடித்த பல்கலைக்கழகமாக இருந்தவர் இராமநாதன். சாதாரண தொண்டராக இருந்து உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக உயர்ந்தவர் அவர் என புகழ்ந்தார்.
இதே போல திமுகவில் நான் எந்த பொறுப்பில் இல்லாமல் இருந்த போதும், என்னை அழைத்து கூட்டம் நடத்தியவர் க.ரா சுப்பையன் என்றார். மேலும் அவர் பேசுகையில், இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்றதும் புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மும்மொழி திட்டம் கொண்டு வர முயல்கின்றார். இதை எதிர்க்க மூத்த முன்னோடிகள் வழியில் நின்று எதிர்த்து போராடியதன் காரணமாக மும்மொழி திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.