கோயம்புத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் கோவை, நீலகிரி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் குனியமுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து உரையாற்றினார்.
வேட்பாளர்கள் கடத்தல்
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அதிகமான வரவேற்பு உள்ளது. அதனால் தான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை மிரட்டுவது, கடத்துவது போன்ற சம்பவங்களில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஈடுபடுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போதும் நியாயமான முறையில் நடந்ததில்லை. கேரளாவில் ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல் முறையாக தேர்தல் நடத்தப்படுகிறது" என்றார்.