கோவை மாநகராட்சியில் கூலி உயர்வை வலியுறுத்தி, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நீண்ட நாட்களாகப் போராடி வரும் நிலையில், இது குறித்து மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கூலி உயர்வு குறித்த தீர்மானம் மேலோட்டமாக இருந்ததால் அதிருப்தி அடைந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், 25 ஆம் தேதியிலிருந்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறி இருந்தனர். அதன்படி நேற்றைய தினம் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் அறிவித்தபடி, அக்.25 தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதனால், மாநகர் முழுவதும் டன் கணக்கில் குப்பைகள் தேக்கமடைந்து உள்ளன.