கோவை:கோட்டைமேடு பகுதியில் ஈஸ்வரன் கோவில் முன்பு, கடந்த 23 ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்ததன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக, போலீசார் இன்று வரை 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே என்ஐஏ அதிகாரிகளும் இது தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ஜமேசா முபினின் வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 75 கிலோ வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து, கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், சாலையோரத்தில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை காவல் துறையினர் அகற்றி வருகின்றனர்.
இதனிடையே தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று (அக்.27) சென்றார். அவர் செல்லும் வழியான கோவை-அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் சாலையோரத்தில் ஒரு கார் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.