கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மாநகரில் கடந்த சில நாட்களில் நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 23ஆம் தேதி மதியம் குனியமுத்தூர் பகுதியில் ரகு என்ற இந்து முன்னணி பொறுப்பாளர் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் எரிபொருள் ஊற்றி பற்றவைக்கப்பட்டது.
அதேபோல அதே நாள் காலை 11 மணியளவில் குனியமுத்தூர் பகுதியில் பாஜக பிரமுகர் பரத் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் வழக்கு பதிவு செய்தோம். இந்த வழக்குகளில் முதல் சம்பவத்திற்கு இந்திய தண்டனைச் சட்டம் 435, வெடி மருந்து வழக்கு, இரு சமூகத்திற்கு பிளவு ஏற்படுத்துவது போன்ற பிரிவுகளில் பதிவு செய்தோம்.
அடுத்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் 436, வெடி மருந்து வழக்கு, இரு சமூகத்தினருக்கிடையே பிளவு ஏற்படுத்துவது போன்ற வழக்குகளை பதிவு செய்தோம். இந்த ஒவ்வொரு வழக்கிலும் தனித்தனியாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு நுண்ணறிவு பிரிவு மற்றும் சிசிடிவி ஆய்வின் மூலம் புலன் விசாரணை செய்தோம். இதில் இன்று 4.30 மணியளவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மதுக்கரையைச் சேர்ந்த ஜேசுராஜ்(34), குனியமுத்தூரை சேர்ந்த இலியாஸ்(34) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இரண்டு நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள். இவர்களை குனியமுத்தூர் ஆய்வாளர் கைது செய்துள்ளார். இவர்கள் இருவரும் எஸ்.டி.பி ஐ நிர்வாகிகளாக உள்ளனர். இவர்கள் இன்று விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவர்.