கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடமும் பல்வேறு மனுக்களை அளித்து வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களின் கூலி உயர்வு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாததால் அதிருப்தி அடைந்த ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பெரும்பாலான ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று பணிக்கு செல்லவில்லை. இதனைத்தொடர்ந்து தற்போது ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டலம் முன்பு, ஒன்று சேர்ந்த துப்புரவுப்பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரியும் ஒப்பந்தப்பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.