கோவை மாவட்டத்தில் அதிக விபத்துக்கள் நடக்கும் 83 இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளது கோவை: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி உடுமலை சாலையில் உள்ள நா. மகாலிங்கம் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் இடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுக் கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக விபத்துகள் இன்றி வாகனங்களை இயக்கிய ஓட்டுநர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “கோவை மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்றும் நடவடிக்கையாக மாதந்தோறும் நடைபெறும் கூட்டங்களில் விபத்துகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து ஆராய்ந்து, விபத்துகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சாலை கட்டமைப்பினால் ஏற்படும் விபத்துகள் என்றால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஓட்டுநர்கள் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளுக்கு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது
குறிப்பாகக் கடந்தாண்டு 83 இடங்களில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருவது கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் விபத்துக்கள் நடைபெறுவதற்கான காரணங்களை ஆராய்ந்து, தற்போது விபத்துகளை முற்றிலுமாக குறைக்க அனைத்து சீரமைப்பு பணிகளும் நடைபெற்றுள்ளது” எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கோகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
இதையும் படிங்க: போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் 8 போட்ட போதை ஆசாமி; வீடியோ வைரலான நிலையில் அதிரடி கைது!