கோவை: மாநகர் பகுதியில் அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மருதமலை ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 52 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. இந்த சிக்னல்களை போக்குவரத்துக் காவலர்கள் அமர்ந்து இயக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காவலர்கள், சிக்னல்களை தன்னிச்சையாக இயக்கும் திட்டம் அமலுக்கு வந்தது. இதனால் அதிக வாகனங்கள் தேங்கி நிற்கும் சாலையில் தேவையான நேரம் அவகாசம் கொடுத்து போக்குவரத்து சரி செய்யும் பணிகளில் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.
காவலர்கள் பணியில் இல்லாத நேரத்தில் டைமர் முறையில் சிக்னல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சோதனை முயற்சியாக சிக்னல்களை காவலர்கள் சாலையில் நடந்து கொண்டே ரிமோட் மூலம் இயக்கும் வகையிலான திட்டம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிராபிக் போலீசுக்கு ரிமோட் சிக்னஸ் கண்ட்ரோலர்- கோவையில் சோதனை முயற்சி இது குறித்து மாநகர போக்குவரத்துக் காவல் துணை கமிஷனர் செந்தில் குமார் கூறுகையில், "முதற்கட்டமாக சோதனை முறையில் டெக்ஸ்டூல் மேம்பாலம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் ரிமோட் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ரிமோட் பயன்படுத்துவதன் மூலம், நிழற்குடையில் அமராமல் சாலையில் நடந்தபடி போக்குவரத்து நெரிசலை காவலர்கள் கட்டுபடுத்தலாம். சாலை விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளையும் அவர்களால் பிடிக்க முடியும்" என்றார்.
இந்த சென்சார் மூலம் சிக்னலை 100 மீட்டர் தொலைவில் இருந்தவாறே இயக்க முடியும். அடுத்தக்கட்ட சோதனை முயற்சியாக லாலி ரோடு சந்திப்பில் உள்ள சிக்னலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் படிப்படியாக மாநகர் முழுவதும் இத்திட்டம் விரிவு செய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க:எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்: திமுக பிரமுகர் புகார்