தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளநிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது.
இந்த கனமழையில் மேட்டுப்பாளையம் ஏடி காலனி பகுதியிலுள்ள பிரபல தனியார் துணிக்கடை அதிபரின் வீட்டின் சுற்றுச்சுவரில் மண்அரிப்பு ஏற்பட்டது. 15 அடிக்கு மேல் உயர்த்தி கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் இன்று அதிகாலை, திடீரென அப்பகுதியிலுள்ள குடியிருப்புகள் மீது விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் 17 பேரின் உடல்களை மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மீட்புப்பணிகளை பார்வையிட்ட கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் உயிரிழந்துள்ளனர், இது தொடர்பாக மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்த உடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.