கோவை மாவட்டம் தடாகம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செங்கல் சூளைகளுக்கு அளவுக்கதிகமாக செம்மண் எடுக்கப்பட்டதால் அலுவலர்கள் மண் எடுப்பதை வரைமுறைப்படுத்த வேண்டும் என செங்கல் சூளை உரிமையாளர்கள் வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குறிப்பிட்ட அளவுக்கே செம்மண் எடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
அளவுக்கதிகமாக மண் எடுக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால், தடாகம் பகுதியில் செம்மண் எடுப்பதைத் தவிர்த்த செங்கல் சூளை உரிமையாளர்கள் தொண்டாமுத்தூர் பகுதியில் செம்மண் எடுக்க முயற்சி செய்தனர். அங்கும் எதிர்ப்புக் கிளம்பியதால் மருதமலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியையொட்டி தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் செம்மண் எடுக்கத் தொடங்கினர்.
சம்பவத்தன்று, இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்த 'ஓசை சுற்றுச்சூழல்' அமைப்பைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சையது என்பவர் சட்டவிரோதமாக செம்மண் எடுத்துக்கொண்டிருந்த நான்கு லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடித்தார்.