கேரளா: திரிச்சூரை சேர்ந்தவர் மணிக்குட்டன்(50). இவர் போத்தனூர் - பாலக்காடு ரயில்வே தண்டவாள பணிகளை மேற்கொள்ளும் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று (செப்.18) வழக்கம்போல பணிக்கு வந்த இவர், ரயில்வே தண்டவாளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஊழியர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்த போது, ஒரு தண்டவாளத்தில் ரயில் வந்துள்ளது.
அப்போது, வேறொரு தண்டவாளத்தில்தான் ரயில் வருவதாக எண்ணி கவனக்குறைவுடன் இருந்துள்ளார். அந்த ரயில் மிக அருகில் வந்தவுடன்தான் ரயில் தான் நிற்கும் தண்டவாளத்தில் வந்துள்ளது என தெரிந்தது.
இதனால் அருகே உள்ள மற்றொரு தண்டவாளத்திற்கு மாறியுள்ளார். அப்போது அத்தண்டவாளத்தில் எதிர்பாராத நிலையில் வந்த பாலக்காடு நோக்கிச் செல்லும் சபரி விரைவு ரயிலில் சிக்கி உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் ரயில்வே காவல் துறையினர், மணிகுட்டன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து தொடர்பாக போத்தனூர் ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து உயிரிழந்த மணிகுட்டன் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர். சக ஊழியர்களின் கண்முன்னே மேலாளர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:தனது 5 வயது தம்பியை அடித்துக் கொன்ற இளம்பெண் கைது.