ஒன்றிய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய கடையடைப்பு, போராட்டம் நடத்திவருகின்றன.
அதன் ஒரு பகுதியாகக் கோவை ரயில் நிலையத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள், பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தின.
அப்போது, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதனையொட்டி அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்கக் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈட்டுபட்டுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் இயங்கவில்லை. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன், "மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று பல்வேறு கட்சிகள் அமைப்புகள் களமிறங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நாடு தழுவிய பந்த்: புதுச்சேரியில் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு