தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நல்ல காரியங்கள் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. மக்கள் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான திருமணம், புதுமனை புகுவிழா, காதணி விழா போன்ற நன்நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தள்ளிவைக்க முடியாத சில நிகழ்வுகள் மட்டும் ஆங்காங்கே குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்களின் பங்கேற்போடு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சுற்றமும் நட்பும் சூழ நடைபெற வேண்டிய சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லையே எனும் ஏக்கமும், விருந்தினர்கள் வரவில்லை எனும் மனக்குறையையும் இந்த கோவிட்-19 ஊரடங்கு ஏற்படுத்தியுள்ளது.
அக்காலம் தொட்டு இக்காலம் வரை இல்லத்தில் நன்நிகழ்வு என்றாலே உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் என்று அனைவரையும் அழைப்பிதழ் வைத்து வரவேற்பதே நம் பாரம்பரிய வழக்கம். அந்த பாரம்பரியத்தில் தொழில்நுட்பத்தின் உதவியோடு கோவையில் இயங்கிவரும் ஸ்ரீ ராஜகணபதி கார்ட்ஸ் அழைப்பிதழ் கடை களமிறங்கியிருக்கிறது.
அதாவது, சில வசதிகளை சேர்த்து வழங்கும் க்யூ ஆர் கோடு(QR Code) ஸ்டுடியோ உதவியுடன் அழைப்பிதழை அச்சிட்டுள்ளனர். அதை ஸ்கேன் செய்வதன் மூலம் நிகழ்வின்போது எடுக்கப்படும் வீடியோவை நேரடியாக நமது கைப்பேசியிலும் கணினியிலும் காணலாம்.
க்யூஆர் கோடை (QR Code) ஸ்கேன் செய்தல்போதும் வீட்டிலிருந்தே கல்யாணத்தை காணலாம் இது குறித்து பேசிய பத்திரிக்கை கடையின் உரிமையாளர் மாரிச்சாமி, “கரோனாவால் பெரும்பாலும் திருமணம், காதணி விழா போன்றவற்றில் கூட்டம் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. எனவே இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் இந்த க்யூ.ஆர் கோடு முறை சிறந்ததாக இருக்கும் என்று தோன்றியது. கரோனாவிற்கு முன் பத்திரிக்கை அடித்து அதை உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் அனைவருக்கும் அளித்து வரவேற்பர். ஆனால், கரோனாவினால் பெரும்பாலும் யாரும் அழைப்பிதழ் அடிப்பதில்லை, அப்படியே அடித்தாலும் குறைந்த அளவே அச்சிடுவர்.
இதனால் நம் உறவுகளை அழைக்காமல் நிகழ்வு நடப்பது போல் இருக்கும். ஆனால் இம்முறையின் மூலம் வீட்டில் இருந்தபடியே நம் உறவினர்கள் நம் வீட்டு நிகழ்வை காணலாம். இதை நாம் உறவினர்கள் வீட்டிற்கு தபால் மூலம் அனுப்பிவிட்டால், அதில் உள்ள க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்வர். அதிலும் இரு க்யூ.ஆர் கோடு உள்ளன. ஒரு க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்தால், முன்னரே நம்மை வரவேற்கும் வகையில் ஒளிப்பதிவு செய்து யூ - டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொலி ஒளிபரப்பாகும்.
இன்னொன்றை நிகழ்வின் போது ஸ்கேன் செய்தால் நிகழ்வை நேரலையில் காணலாம். அதுமட்டுமின்றி நாம் மொய் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் திருமண தம்பதிகளின் வங்கி எண் போன்றவை அச்சிடப்பட்டிருக்கும். அதில், ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். பரிசு ஏதேனும் அளிக்க விரும்பினால் அதில் அச்சிடப்பட்டுள்ள முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம். இதன் மூலம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகிழ்ச்சியும் கிடைக்கும்” என தெரிவித்தார்.
கோவிட்-19 போன்ற நெருக்கடியான சூழலில் இத்தகைய புது வசதியானது, மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க :ஆட்டோ ஓட்டுநராக மாறிய புகைப்படக் கலைஞர்: பிபிஇ உடையுடன் சவாரி!