கோயம்புத்தூர்: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில், அதன் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்தியாவின் ராணுவ பலத்தை உலகிற்கு காட்டும் வகையிலும் கலாசாரங்களை முக்கியப்படுத்தும் வகையிலும் குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெறுகிறது. அதேபோல் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அவர்களது தியாகங்களை எடுத்துச்சொல்லும் வகையில் அலங்கார ஊர்திகள் இடம்பெறும்.
இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து சுதந்திரத்துக்காக போராடிய வீரர்களுடைய உருவங்கள் இடம்பெற்ற ஊர்தி இடம்பெறவில்லை. மேற்குவங்காளத்தில் சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர் இடம்பெற்ற ஊர்தி, கேரளாவைச் சேர்ந்த நாராயண குரு வரலாறு இடம்பெற்ற ஊர்தி இடம்பெறவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது
தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பது நியாயமில்லை. இதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது எனப் பிரிவினை நோக்கத்தோடு கூறுவது ஆபத்தானது, தவறான கண்ணோட்டம்.
2018 முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. அலங்கார ஊர்தி என்பது பார்த்தவுடன் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வ.உ.சி, வேலு நாச்சியார் ஆகியோர் சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் மூன்று முறை தேர்வுக்கு அனுப்பப்பட்ட அலங்கார ஊர்தி மாதிரிகள், நிராகரிக்கப்பட என்னக் காரணம், தமிழ்நாடு அரசு என்ன மாதிரியான கருப்பொருள் தெரிவித்தார்கள் எனப் பார்க்க வேண்டும். தமிழ்நாடு அரசு அதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.