தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பொள்ளாச்சியில், நகராட்சி அலுவலர்கள் கடைகளில் ஆய்வு நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அதை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்துவந்தனர்.
ஆனால் நகராட்சி அலுவலர்கள் அத்துமீறி கடைக்குள் நுழைந்து அரசால் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்து லட்சக்கணக்கில் அபராதம் விதித்து வருவதாக வணிகர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நகராட்சி அலுவலர்களின் செயலைக் கண்டித்து பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் இருதய ராஜா தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொள்ளாச்சியில் வணிகர்கள் போராட்டம்! இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி சிறு வியாபாரிகள் சங்கம், பொள்ளாச்சி கிணத்துக்கடவு, வால்பாறை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்துகொண்டு முழக்கம் எழுப்பினர். மறுசுழற்சி செய்ய முடியாத அன்னிய பொருட்களின் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்யாமல், தடை செய்யப்படாத முறுக்கு, கடலை மிட்டாய் உள்ள மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கவர்களை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்வதாக வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது குற்றம்சாட்டினர்.
எனவே, வணிகர்களுக்கு எதிராக செயல்படும் பொள்ளாச்சி நகராட்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.