சென்னை: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஃபர்ஹானா. இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்று கூறி தமிழகத்தில் பல இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனால் திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இன்னும் ஒருபடி சென்று சில ஊர்களில் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் இன்று படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன், தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா மனுஷ்யபுத்திரன் ஆகியோர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
முதலாவதாக பேசிய படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ”ஒரு திரையரங்கில் மட்டும் தான் படம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் நிறைய திரையரங்குகளில் ரத்து என தவறான தகவல் பரவி வருகிறது. இது அனைவருக்குமான படமாகவும். குடும்ப படமாக இருப்பதாகவும் படம் பார்த்த பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குழந்தைகளுக்கான படமா என்றால் அது இல்லை. ஆனால் குடும்பங்களுக்கான படம்.
எனவே யாருக்கும் தயக்கம் வேண்டாம். அனைவரும் வந்து திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்க்கலாம். உலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் ஒரு திரையரங்கில் மட்டும் தனிப்பட்ட காரணத்திற்காக படம் திரையிடப்படவில்லை. இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் இல்லை என்றும் தெரிவித்தார்.
ஒரு நல்ல படத்தை புரிந்து கொள்ளாமல் இதுபோன்று யார் தவறாக சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு சமூகத்தை சேர்ந்த படமோ அல்லது தனிப்பட்ட குடும்பத்தை பற்றியோ இந்த கதை இல்லை. அதனால் தான் துணிச்சலோடு பத்திரிக்கையாளர்களோடு உரையாட அழைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.