கோயம்புத்தூர்: கோவையில் இருந்து சீரடி சாய்பாபா கோயிலுக்கு தனியார் நிறுவனம்(எம்.என்சி டெவலப்பர்ஸ்) சவுத் ஸ்டார்(South Star) என்ற ரயில் சேவையை துவங்கி உள்ளது. வடகோவை முதல் சீரடி வரை இந்த ரயில் பயணமாகிறது. இதன் துவக்க நிகழ்ச்சியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் இயக்குனரும் நடிகருமான சேரன் உட்பட பாஜகவினர் கலந்து கொண்டனர்.
பயணத்தை துவக்கும் முதல் நாளான இன்று(ஜூன் 14) ரயிலுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பூக்கள் தூவப்பட்டு ரயில் சேவையானது துவங்கியது. இந்த ரயிலில் பயணச்சீட்டு மற்றும் பராமரிப்புப்பணிகளை தனியார் நிறுவனமே மேற்கொள்ள உள்ளது. மேலும் சிறப்பம்சமாக இந்த ரயிலில் ஹவுஸ் கீப்பிங் செக்யூரிட்டி மற்றும் மருத்துவர்கள் உள்ளனர். மேலும் இதில் சமையலறை வசதியும் உள்ளது.
இதில் பயணிப்பவர்களுக்கு சீரடியில் தரிசனம் செய்ய விஐபி தரிசனம் வழங்கப்பட்டு தங்கும் அறைகளும் வழங்கப்படுகின்றன. மேலும் பயணிகள் உறங்குவதற்குத் தேவையான தலையணைகள், போர்வைகள் வழங்கப்படும். இதில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு பக்தி பாடல்கள் ஒலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரம் ஒருமுறை இயக்கப்படும் இந்த ரயில் வட கோவையில் துவங்கி திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூர், மந்திராலயம் வழியாக சீரடி சென்றடையும். இதற்கான டிக்கெட்டுகள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதியில் உள்ள சாய்பாபா கோயில்களில் கிடைக்கும் என தனியார் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் கட்டணம் இரண்டு வகையாக வசூலிக்கப்படுகிறது.
சாதாரண படுக்கை கட்டணமாக ரூ.2500 மற்றும் பேக்கேஜ் கட்டணம் என்றால் 4,999 ரூபாயாகவும், மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கை பெட்டிகளுக்கு ரூ.5000 மற்றும் பேக்கேஜ் கட்டணமாக 7,999 ரூபாயும், இரண்டடுக்கு குளிர்சாதனப்பெட்டிகளுக்கு ரூ.7000, பேக்கேஜ் கட்டணமாக 9,999 ரூபாயும், முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிக்கு ரூ.10,000 மற்றும் பேக்கேஜ் கட்டணமாக 12,999 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.