கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் பகுதியில் உள்ள அறிவு திருக்கோயிலில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா பயிற்சி நேற்று நடைபெற்றது. இதில், இந்திய ஆட்சி பணி அதிகாரியும், தமிழ்நாடு அறிவியல் நகரம் துணைத் தலைவருமான சகாயம் ஐஏஎஸ் கலந்து கொண்டு யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களிடையே பேசினார். இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சகாயம் ஐஏஎஸ், ‘கிராமப்புற விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளுக்குப் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கிராமப் புறத்தில் உள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகளில் சிறப்பான கண்டுபிடிப்புகளுக்குத் தலா ஒரு லட்சம் வரை பரிசுத் தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.