பொள்ளாச்சி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக, சர்க்கார்பதி பகுதியில் மலையிலிருந்து பாறை ஒன்று உருண்டு வந்து காண்டூர் கால்வாயில் விழுந்ததில் அடைப்பு ஏற்பட்டது. அப்போது காட்டாற்று தண்ணீர் சர்க்கார்பதி பகுதியில் உள்ள நாகூர் ஊற்று மலைவாழ் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு வயது குழந்தை மாயம்! - பொள்ளாச்சி
கோவை: பொள்ளாச்சி அருகே நேற்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இரண்டு வயது குழந்தை அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில், 30க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வந்த குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், அதிர்ச்சியடைந்த மலைவாழ் மக்கள் அலறியடித்து வெளியேறினர். வெள்ளம்போல் கடம்புரண்டு வந்த காட்டாற்று தண்ணீரில் அழகம்மாள் என்பவரின் இரண்டு வயது பெண் குழந்தை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், தண்ணீரில் சிக்கிய மலைவாழ் மக்களை மீட்டனர். வெள்ளத்தில் மீட்கப்பட்ட மக்கள் சர்க்கார்பதி மின்வாரிய குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரவு நேரம் மற்றும் மின்சாரம் இல்லாத காரணத்தால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இன்று காலை முதல் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த வனத்துறையினர், தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 2 வயது குழந்தையை அருகில் உள்ள பீடர் கால்வாயில் பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் தேடி வருகின்றனர்.