தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆழியார் ஆற்றிலிருந்து அம்பராம்பாளையம் பகுதிக்கு நிறம் மாறி வந்த குடிநீர்.. காய்ச்சி குடிக்க மாநகராட்சி தலைவர் அறிவுறுத்தல்! - Municipal Corporation Chairman shyamala

Ambarampalayam water issue: பொள்ளாச்சி அம்பராம்பாளையம் ஆற்றில் குடீநீர் மாறுபட்டதையடுத்து ஆய்வு செய்த மாநகராட்சி தலைவர், ஆற்றிலிருந்து வரும் நீரை சூடு பண்ணி குடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சித் தலைவர் எச்சரிக்கை
குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சித் தலைவர் எச்சரிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 6:48 AM IST

ஆழியார் ஆற்றிலிருந்து அம்பராம்பாளையம் பகுதிக்கு நிறம் மாறி வந்த குடிநீர்

கோயம்புத்தூர்:பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கும் அம்பராம்பாளையம் அருகே உள்ள ஆழியார் ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நகருக்கு வழங்கப்படும் குடிநீரின் நிறம் மாறுபட்டு இருந்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் நகராட்சியில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து நகராட்சித் தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் தலைமையில் நகராட்சி பொறியாளர் உமாதேவி, கவுன்சிலர்கள் பாத்திமா, நாகராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அம்பராம்பாளையத்திலுள்ள நீரேற்று நிலையத்திற்குச் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

இந்த ஆய்வின்போது, ஆற்றிலிருந்து நீர் எடுக்கும் இடம், தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டனர். பிறகு அங்கு பணியில் இருந்த உதவி பொறியாளர் கணேசனிடம், குடிநீரின் நிறம் மாறியதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர். ஆய்வு குறித்து நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஆழியார் ஆற்றில் இருந்து பெறப்படும் தண்ணீர் முறையாக சுத்திகரிப்பு செய்யப்பட்டு, பொள்ளாச்சி நகர மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக குடிநீரின் நிறம் மாறி உள்ளதாக புகார் எழுந்தது.

உடனடியாக சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். கடந்த சில நாட்களாக பொள்ளாச்சியின் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஆழியார் ஆற்றில் செம்மண் கலந்தே தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாகத்தான் பொள்ளாச்சி நகருக்குள் வழங்கும் குடிநீரின் நிறமும் மாறியுள்ளது. ஆனால், முறைப்படி சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகுதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது என்பது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும், குளோரின் அளவை சற்று அதிகரித்தும், கூடுதல் சுத்திகரிப்பு செய்தும் குடிநீர் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் புதிய மின்மோட்டார்கள், வால்வுகள், ட்ரான்ஸ்பார்மர் உள்ளிட்டவற்றை பொருத்தும் பணிகள் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நகரில் உள்ள 36 வார்டுகளுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாளே குடிநீர் வழங்க முடியும். மேலும், பொதுமக்கள் குடிதண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details