பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடைப் பகுதியில் தனியார் தென்னந்தோப்புக்குள் அனுமதியின்றி செயல்பட்ட கேளிக்கை விடுதியில், நேற்று முன்தினம் (மே 3) இரவு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதையில் அட்டகாசம் செய்துள்ளனர். இதை அறிந்த அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் ஆனைமலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினர் போதையில் இருந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், அங்கிருந்த பெரும்பாலானோர் கேரள மாநிலம் வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் குழுவாக செயல்படும் அவர்கள் சேத்துமடைப் பகுதியில் 'போதை விருந்து' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அங்கு வந்து மது, கஞ்சா, போதை மருந்துகள் உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்தி அட்டகாசம் செய்துவந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தியது. அதன் அடிப்படையில் அங்கிருந்த 162 இளைஞர்களைக் கைது செய்து அவர்களிடமிருந்து போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.