கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அருகேவுள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் மண்டபம் தனியார் குடியிருப்பில் வசித்துவந்தவர் தினேஷ். இவர் மாசாணி அம்மன் கோயில் தேங்காய் பழம் விற்கும் கடையில் பணிபுரிந்துவந்தார். இவர் வசிக்கும் பகுதியில் 15 குடியிருப்புகள் உள்ளன.
இதில் ஒரு வீட்டில் தினேஷின் அக்கா பரமேஸ்வரி வசித்துவருகிறார். கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 19) அப்பகுதியிலுள்ள குழாயில் நீர் பிடிப்பதில் பரமேஸ்வரிக்கும், அதே குடியிருப்பைச் சேர்ந்த அகல்யாவுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்ட தினேஷ், அகல்யா, அவரது தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அகல்யா தனது கணவர் தமிழ்செல்வனிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த தமிழ்செல்வன், தனது நண்பர்களுடன் சேர்ந்து தினேஷை சரமாரியாகத் தாக்கினார்.