தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன ஓட்டிகளுக்கு தேநீர் கொடுத்து போலீசார் விழிப்புணர்வு - நெடுஞ்சாலை

கோவை: சூலூரில் அதிகாலை நேரத்தில் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகளுக்கு தேநீர் கொடுத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் .

போலீசார் விழிப்புணர்வு

By

Published : Jul 28, 2019, 4:02 PM IST

கோவை மாவட்டம் சூலூர் அருகே வெள்ளலூர் பிரிவில் நேற்று அதிகாலை கேரளாவிலிருந்து காரில் வந்த பஷீர் முகமது மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் நான்கு பேர் தூக்க கலக்கத்தில் எதிரில் வந்த லாரி மீது மோதினர். இதில் காரில் பயணம் செய்த ஐந்து பேரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இன்று காலை 3 மணி அளவில் சூலூர் கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் சூலூர் வட்ட ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் ஜெயராஜ் அடங்கிய காவல் துறையினர் எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அதிகாலை நேரத்தில் பயணிப்போர், நெடுந்தூரத்திலிருந்து வரும் லாரி டிரைவர்களை நிறுத்தி முகம் கழுவ வைத்து, தேநீர் கொடுத்து சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்லுமாறு அறிவுரை கூறும் பணியை தொடங்கினர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், ”நேற்று நடந்த விபத்தில் 5 பேர் பலியானதற்கு காரணம் ஓட்டுநர் போதிய ஓய்வின்றி வாகனத்தை இயக்கியதே. இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் சூலூரில் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை இன்று முதல் தினந்தோறும் காலை மூன்று மணி முதல் ஆறு மணிவரை நிறுத்தி அவர்களுக்கு தேநீர் கொடுத்து அனுப்புவதை வழக்கமாக செய்யவேண்டும் என்று முடிவெடுத்து இன்றிலிருந்து செயல்படுத்தத் தொடங்கியுள்ளோம்.

இதற்கு ஓட்டுனர்கள், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தப்பணியை தொடர்ந்து செய்தால் சூலூர் பகுதியில் அதிகாலை நேரத்தில் ஏற்படும் விபத்துகளை நூறு விழுக்காடு கட்டுப்படுத்த முடியும்” என்றார்.

போலீசார் விழிப்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details