கோயம்புத்தூர்:அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், துணிவு. இப்படம் இன்று (ஜன.11) பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. முதன்முதலில் தமிழ்நாட்டிலேயே துணிவு படத்தின் சிறப்பு காட்சிதான் நள்ளிரவு 1 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்புக்காட்சியை காண, ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை பூ மார்க்கெட்டில் உள்ள அர்ச்சனா தர்ஷனா திரையரங்கில் துணிவு படத்தின் நள்ளிரவு 1 மணி காட்சிக்கு அதிகளவில் ரசிகர்கள் திரண்டதால், திரையரங்க வாயில் கதவை நேற்றிரவு 11.30 மணி அளவில் உடைத்துக்கொண்டு ரசிகர்கள் உள்ளே புகுந்தனர்.
அப்போது அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் காவல் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். ஆனாலும், ரசிகர்கள் கண்ணாடி, கைப்பிடி இரும்பு ஆகியவற்றை உடைத்துக் கொண்டு தியேட்டருக்குள் புகுந்தனர்.