கோயம்புத்தூர்: சூலூர், பள்ளபாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் தர்ஷா, சோனா என்ற திருநங்கைகள். தர்ஷா திருநங்கைகளுடன் சேர்ந்து போக்குவரத்து சிக்னல்களில் யாசகம் செய்துவருவதை வழக்கமாக கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு (மே 07) ஒண்டிபுதூர் மிராஜ் தியேட்டர் அருகே வீட்டிற்குச்சென்று கொண்டிருந்த தர்ஷாவைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இருவர், தர்ஷாவை தங்களுடன் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளனர். இதற்கு மறுப்புத்தெரிவித்த தர்ஷாவை கத்தியைக்காட்டி மிரட்டி செல்போன், பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
அப்போது அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அதற்குள் தர்ஷாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் தர்ஷாவின் கை மற்றும் கழுத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, வலி தாங்காமல் கதறியுள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற சிங்காநல்லூர் காவல் துறையினர், தர்ஷாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.