கோயம்புத்தூர்:சூலூர் ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் குமார் (51) - சுமதி (46) தம்பதி. இவர்கள், அப்பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை ஸ்ரீ முருகன் சிறுசேமிப்பு என்ற பெயரில் ஏலச்சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.
இவர்களது ஏலச்சீட்டு நிறுவனத்தில், சூலூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் 13 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி உள்ளார். ஸ்ரீதேவியின் பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள், பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். ஸ்ரீதேவியும் தனது பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு தொடர்ந்து கேட்டுள்ளார்.
பல முறை கேட்டும் அந்த தம்பதி செவி சாய்க்கவில்லை எனவே, இது குறித்து ஸ்ரீதேவி கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.