கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தொடர் போராட்டத்தை அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, சென்னையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மனுவளிக்கும் போராட்டத்தை பாமகவினர் அறிவித்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று (டிச.30) கோயம்புத்தூரில், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் ராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தலைமையில் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 20க்கும் மேற்பட்டோர், வன்னியர் சமுதாயத்திற்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பியவாறு வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின்னர், பாமக ஊடக பேரவை தலைமைக் குழு தமிழ்வாணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தமிழ்நாடு அரசு உடனடியாக எங்களது மனுவை பரிசீலனை செய்து, அதனை நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கையானது வன்னியர்களுக்கு மட்டும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதியினருக்கும் அவரவர் சாதியின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடுகளை அரசு தர வேண்டும்” என்று தெரிவித்தார்.