கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி என்றால் முதலில் நினைவுக்கு வருவது பழமை வாய்ந்த மாட்டுச்சந்தைதான். இந்த சந்தை மார்க்கெட் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டுவந்தது. இதன்மூலம் நகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டி வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு செயல்பட்டுவந்த மாட்டுச்சந்தை போதுமான இடவசதி இல்லாததாகக் கூறி திப்பம்பட்டி கிராமத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதனால், அப்பகுதியில் மாட்டு சந்தையை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த பழமை வாய்ந்த பொள்ளாச்சி மாட்டு சந்தையை மீண்டும் இங்கு செயல்படுத்த வேண்டும் என்று மாட்டு வியாபாரிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.