கோவை:மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, முதல்வரின் காப்பீட்டு திட்ட வார்டு உள்ளிட்ட மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளில் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் பற்றியும் தேவையான வசதிகள் குறித்தும் கலந்தாலோசித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் தற்போது கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது உலக அளவில் ஒரு நாளைய கரோனா தொற்று 3 ஆயிரம் பேருக்கும், அண்டை மாநிலமான கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 765 பேருக்கும், தமிழகத்தில் நேற்று முன்தினம் 139 பேருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, கோவையில் 14 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தற்போது பரவி வரும் BA 2 XBB உருமாறிய வைரஸ் கரோனா தொற்று பாதிப்பு குறைவாக இருக்கும் ஆற்றல் உடையது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தொற்று குறைவாக இருப்பதாகவும், இறப்பே இல்லாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கரோனா பரவல் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் போதிய அளவிற்கு தயாராக உள்ளது. தடுப்பூசி மருந்துகளும் போதுமான அளவில் உள்ளன. மருத்துவமனைகள் மூலம் கரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.