தமிழகத்தில் காதி விற்பனை 9 ஆண்டுகளில் அதிரடி உயர்வு கோயம்புத்தூர்:காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள கதர் பவன் அங்காடியில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.
கோயம்புத்தூர் கதர் பவன் விற்பனை நிலையத்தில், மகாத்மா காந்தியடிகள் மற்றும் காமராஜர் ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர் கைத்தறி கதர் ஆடைகள், பட்டு சேலை மற்றும் கைவினைப் பொருட்களை பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "தமிழகத்தில் நாடு முழுவதும் உள்ளூர் பகுதிகளில் தயாரிக்கப்படுகின்ற சர்வோதய பொருட்கள் மற்றும் காதி பொருட்களை நாம் விலை கொடுத்து வாங்க வேண்டும். மேலும், அவற்றுக்கு அங்கீகாரம் கொடுக்கின்ற வகையில் 'Vocal for Local' என பாரத பிரதமர் எங்கு சென்றாலும் அதனை பயன்படுத்தி வருகிறார்.
மேலும், பிரதமர் மோடி நம் ஊர் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். உள்ளூர் பொருட்கள் கிராமப் பொருளாதாரம் சார்ந்தது. பண்டிகை நாட்களில் நம்முடைய நாட்டில் தயாரிக்கப்படக்கூடிய சுதேசி பொருட்களை வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்று கூறினார்.
அதனைத்தொடர்ந்து, அனைவரும் காதி கடைகளுக்கு சென்று அவர்களுக்கு பிடித்தவற்றை வாங்கிக் கொண்டு வருகிறார்கள். கோவை டவுன்ஹால் பகுதியில் 60 வருடமாக இருக்கின்ற சர்வோதயா சங்கத்தின் காதி கடையில் பொருட்களை வாங்கி வருகிறோம். 40% தள்ளுபடியும் கொடுத்து வருகிறார்கள். காதி விற்பனை 33,000 கோடியிலிருந்து 9 ஆண்டுகளில் 1,34,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்க கூடிய பொருட்கள் மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு கொடுப்பதால் உலக நாடுகள் பட்டியலில் இந்திய பொருட்களுக்கான தனித்துவமான ஒரு மார்க்கெட்டை உருவாக்குவதோடு, நாட்டின் முன்னேற்றமும் உறுதிப்படுத்துகின்றது. மோடி அவர்கள் ஜி 20 மாநாட்டில் அனைத்து விருந்தினர்களுக்கும் நமது நாட்டில் பாரம்பரிய முறைப்படி அந்தந்த பகுதியில் கிடைக்கக்கூடிய பொருட்களை பரிசளித்தார்.
மேலும், அயல்நாடுகளுக்கு செல்லும்போது அங்குள்ள தலைவர்களுக்கு நம்மூரில் கிடைக்கக்கூடிய கைவினைப் பொருட்களை பரிசாக கொடுத்தார். டெல்லி பயணத்தை பற்றிய கேள்விக்கு, டெல்லி பயணம் சிறப்பாக இருந்தது. மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது. கட்சி தேசிய தலைமை மற்றும் முக்கியமான தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்று கூறினார்.
அதனைத்தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் மது விற்பனை நடந்து வருவது பற்றிய கேள்விக்கு, அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை எந்த ஒரு சுணக்கமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கூட்டணி பற்றிய கேள்விக்கு, சத்தீஸ்கர் மாநிலம் ராஜஸ்தான் தேர்தலுக்கான வேட்பாளரகள் தேர்வு செய்யக்கூடிய கூட்டம் தான் நடந்தது. இரண்டு மாநிலத்தில் தேர்தலின் போது பிஜேபி செய்ய வேண்டிய நிகழ்ச்சிகள், திட்டங்கள் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது.மேலும், ஓ.பி.எஸ் பி.ஜே.பியில் இணைப்பது பற்றி கேள்விக்கு, அதைப்பற்றி எனக்கு தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:மின்சார ரயிலில் தீடீர் புகை… அலறியடித்து ஓடிய பயணிகள்! என்ன காரணம்?