'ஒழுங்கா படிக்கலைனா மாடு, ஆடு மேய்க்கத்தான் போவீங்க' என நம் ஆசிரியர்கள் அக்கறையுடன் திட்டியதை நாம் எல்லோரும் கண்டிப்பாக காது குளிர கேட்டு கடந்துதான் வந்திருப்போம். அப்படி ஆசிரியரின் அன்பான சொற்களைக் கேட்டு பொறியியல் வரை படித்துவிட்டு, தனது சொந்த காலில் நிற்க வேண்டுமென நாட்டுக்கோழிகளை வளர்த்துவருகிறார் கொங்கு மண்டல இளைஞர் ஒருவர்.
கோவை மாவட்டம் பசூர் அடுத்த கம்மாள தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ்- சகுந்தலா மணி தம்பதியரது மூத்த மகன் கிருஷ்ணமூர்த்தி, கணினி அறிவியல் பொறியியல் முடித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டுக்கோழி விற்பனையில் இறங்கியுள்ளார். மேலும் வாத்து, முயல், புறா ஆகியவற்றையும் வளர்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார்.
இது குறித்து பட்டதாரி இளைஞர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “2016ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த பிறகு இரண்டு இடங்களில் பணியாற்றிவந்தேன். அங்கு எனக்குப் போதிய வருவாய் இல்லாததால் சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் என முடிவுசெய்தேன்.
அதன்படி, அழிந்துவரும் நாட்டுக்கோழி இனங்களைப் பல்வேறு சந்தைக்குச் சென்று வாங்கிவந்து வீட்டில் வளர்த்துவந்தேன். பின்னர் அதனை அசைவ உணவகங்களுக்கு விற்பனைசெய்தேன்.
முதலில் மிகக் குறைந்த வருமானம் கிடைத்த நிலையில், தற்போது எனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளதால் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள அசைவ உணவகங்களுக்குத் தரமான நாட்டுக்கோழி வகைகளை விற்பனை செய்துவருகிறேன். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்த இந்தத் தொழில் தற்போது நல்ல ஒரு வருமானத்தை தருகிறது.
ஆரம்பத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பிற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், என்னுடைய விருப்பம் சுய தொழில்செய்வது எனத் தெரிவித்ததை அடுத்து அவர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். கூலித் தொழிலாளர்களான எனது பெற்றோர் என்னைப் படிக்கவைத்து நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என எண்ணியிருந்தனர்.
ஆனால் எனக்குச் சொந்தத் தொழிலில் விருப்பம் என்பதாலேயே என்னுடைய போக்கிலேயே விட்டுவிட்டனர். தற்போது நாட்டுக்கோழி இனங்களில் கடகநாத் கோழி, கிண்ணி கோழி எனப் பலவகை கோழிகளை எங்கள் வீட்டில் வளர்த்துவருகிறேன். விரைவில் வாத்து, புறா, முயல் வளர்க்க முயற்சிகள் எடுத்துவருகிறேன். தற்போது ஊரடங்கு காலத்தில் விற்பனை மந்தமாக இருந்த போதிலும் என்னுடைய வருமானம் குறையவில்லை” என மகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.