கேரள மாநிலத்தின் முக்கியப் பண்டிகையான ஓணம் அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ளது. ஓணம் பண்டிகையையொட்டி ஒவ்வொரு வீடுகளிலும் அத்தப்பூ கோலம் இடுவது வழக்கம். இதற்காக அதிகளவில் செண்டுமல்லி பூ பயன்படுத்துகின்றனர். இந்தப் பூ தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கேரளாவிற்குச் செல்லும்.
இந்நிலையில், இந்தாண்டு ஓணம் பண்டிகைக்காக கோவை நரசிபுரம் பகுதியில் சுமார் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் செண்டுமல்லி பூ பயிரிட்டிருந்தனர். பூ பறிக்க இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் அண்மையில் பெய்த கனமழையால் செண்டுமல்லி பூ அதிகளவு அழுகின. இதனால் பூ பறித்து அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கேரளாவிற்கு செண்டுமல்லி பூ அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையையொட்டி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் செண்டுமல்லி பயிரிட்டு கேரளாவிற்கு அனுப்புவோம். இந்நிலையில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக பயிரிடப்பட்ட அனைத்துப் பூவும் பறிக்கும் சமயத்தில் அழுகிவிட்டன.
இதனால் கேரளாவிற்கு பூக்கள் அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டதோடு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு கேரளாவில் ஏற்பட்ட பெரும் மழையால் ஓணம் பண்டிகையை கொண்டாட முடியாத நிலையில் பூக்களின் விலை மிகக் குறைவாக விற்கப்பட்டதால் நஷ்டம் ஏற்பட்டது" என்றார்.
ஓணம் பண்டிகைக்காக பயிரிடப்பட்ட பூ மழையால் சேதம்! இந்நிலையில், இந்தாண்டு பெய்த மழையால் சேதமடைந்துள்ள பூவுக்கு ஈடாக தங்களுக்கு அரசு பயிர் காப்பீடு மூலம் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என அனைத்து விவசாயிகளும் கோரிக்கைவைத்துள்ளனர்.