நாடு முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 35 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் அத்தியாவசியத் தேவைகளுக்குப் பணமின்றித் திண்டாடி வருகின்றனர்.
இதனிடையே பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் காயர் ஆலை, பெட்ரோல் விற்பனை நிலையம் ஆகியவற்றில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் வேலை செய்து வந்தனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஆலைகளில் வேலை இல்லாமலும், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் குறைந்தபட்ச ஊழியர்களுமே வேலைபார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு 22 கி.மீ. நடந்து வந்த தொழிலாளர்கள் இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இத்தனை நாள்களாக உணவு, இருப்பிடம் கொடுக்கப்பட்டுவந்த தொழிலாளர்களுக்கு, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் உணவு, இருப்பிடம் மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் வடமாநிலத் தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊர் திரும்புவதற்காக சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு 22 கி.மீ. நடந்தே வந்துள்ளனர். இவர்களின் நிலை குறித்து வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, ''அனைத்து தொழிலாளர்களையும் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அவர்களின் தேவைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:'உணவுக்குக்கூட வழியின்றித் தவிக்கின்றோம்' - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்